பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசில் அவர்கள் புகார் செய்தனர். இந்த புகார் மீது விசாரணை நடத்திய போலீசார் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை கைது செய்தனர்.
எனினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென்று சிலர் போலீஸ் நிலையம் மீது கல்வீசினர். வாகனத்தை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வன்முறையாளர்களை விரட்ட போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனை, பேருந்துகள் மீதும் கல்வீசி தாக்கப்பட்டன. வன்முறையை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையால் அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து வன்முறையாளர்களை விரட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தார்வாட் துணை கமிஷனர் நித்தேஷ் பாட்டீல் பழைய ஹுப்பள்ளி பகுதிகளுக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 கவுன்சிலர்கள் உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை சம்பவம் தொடர்பாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் உப்பள்ளி நகரில் வருகிற 20-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பாக விசாரிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமான முகநூல், வாட்ஸ் சாப் பதிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், மாநிலத்தில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இதை போலீசார் சகித்து கொள்ளமாட்டார்கள். சட்டத்தை கையில் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.