புதுடில்லி,-எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், மத்திய அரசுப் பணிக்கு அயல்பணியாக வருவதை கட்டாயமாக்கும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பற்றாக்குறை உள்ளது. மாநில அரசுகள், தடையில்லா சான்றிதழ் அளித்தால் மட்டுமே, இந்த அதிகாரிகள், அயல் பணியாக மத்திய அரசு பணிகளுக்கு செல்ல முடியும் நிலை இருந்தது.இதையடுத்து, மத்திய அரசின் துறைகளில் இணைச் செயலர் அல்லது இயக்குனர் பதவிகளுக்கு அயல் பணியாக வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டுமே இணைச் செயலர் பதவிக்கு தகுதி பெறுவர் என, மத்திய அரசு 2020ல் சட்ட விதிகளை மாற்றியது.காலியிடங்கள்மேலும், மத்திய அரசு கேட்கும் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாநில அரசுகள் அனுப்புவதை கட்டாயமாக்கும் வகையில், பணி சட்ட விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலங் களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
இதற்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்.,கின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய பரிந்துரையை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:தற்போதுள்ள சட்டங்களின்படி, ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், மத்திய அரசு துறைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டு பணிபுரிந்தால் மட்டுமே, மத்திய அரசு அமைப்புகளின் உயர் பதவிக்கு தகுதி பெறுவர்.இதன்படி, ஐ.ஜி., மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே அயல் பணிக்கு வருகின்றனர். சி.பி.ஐ., மற்றும் ஐ.பி., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு போன்றவற்றுக்கு போலீஸ் அதிகாரிகள் ஆர்வமுடன் வருகின்றனர்.
அதே நேரத்தில் துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவற்றில் எஸ்.பி., – டி.ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரிகள் பணியிடங்கள், 50 சதவீதம் வரை காலியாக உள்ளன. மாநில அரசுகள் அனுமதி மறுப்பதால், அதிகாரிகள் இந்தப் பதவிகளுக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.அதையடுத்தே, இந்த அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளையும் மத்திய அரசு பணிக்கு அயல் பணியாக அனுப்புவதை கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தடையில்லா சான்றிதழ்
இது குறித்து, சில மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளதாவது:தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசுடன் மோதல் போக்கில் உள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது பல மாநிலங்களும் இணைந்துள்ளன.மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்ல முடியாது. அதையும் மீறி ஆர்வம் காட்டினால், மாநில அரசுகளால் பழிவாங்கப்படும் அபாயம் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.