சென்னை: மழை பாதிப்பு, கால்நடைகள் இறப்பு மற்றும் உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடுமாறு தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எதிர்பாரா மழை பாதிப்பாலும் ரசாயன உரங்கள் கிடைக்காமலும் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். யூரியா மற்றும் டிஏபி ரசாயன உரங்கள் தொடர் தட்டுப்பாடாக உள்ளது. குறைந்த அளவில் சில நேரங்களில் வரும்போது அந்த உரங்களை உரிய விலைக்கு பில் கொடுத்துவிட்டு விற்பனையாளர்கள் கூடுதல் பணம் கேட்கிறார்கள் அல்லது விவசாயிகளுக்கு தேவையில்லாத வேறு இடுபொருட்களை வாங்கினால் தான் உரம் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உரக் கம்பெனிகளே அவர்களின் பிற தயாரிப்புகளை உரங்களுடன் சேர்த்து கட்டாய விற்பனை செய்கிறது என்கிறார்கள். உரிய காலங்களில் அதற்கு உரிய உரங்களை போட்டால் தான் மகசூல் எடுக்கவும் முடியும்… என்ற சூழ்நிலையில் விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு எதிர்பாராது பொழியும் மழையால்.. தமிழக அளவில் பரவலாக பருத்தி, மக்காச்சோளம், பச்சைபயிர், உளுந்துபயிர் வகைகள்… நிலக்கடலை, காராமணி வாழை போன்ற பயிர்கள் அழிந்துள்ளன. மாமரங்களின் பூ, பிஞ்சுகள் உதிர்ந்துவிட்டன. நெல் தரிசில் வழக்கமாக பயிரிடும் பச்சைப் பயிறு மற்றும் உளுந்து நல்ல மகசூல் கண்டு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் முற்றாக அழிந்து விட்டது. பல இடங்களில் முளைத்தும் பூஞ்சாணம் பிடித்தும் வீணாகி விட்டது. நிலக் கடலை, காராமணி போன்ற பயிர் வகைகளும் அழிந்துள்ளன.
நடப்பாண்டு கூடுதல் விலை கிடைக்கும் என நம்பி விவசாயிகள் கடந்தாண்டை விட இருமடங்கு பருத்தி சாகுபடி செய்துள்ளார்கள். விட்டுவிட்டு தொடர்ந்து பெய்யும் மழையினால் இவை தண்ணீர் தேங்கி வேரழுகல் நோய் ஏற்பட்டு அழிந்து வருகிறது. கடந்த இரு மாதங்களாக விதைத்த பருத்திச் செடிகள் முழுமையாக அழியும் நிலையில் உள்ளது. சிலர் மீண்டும் இரண்டாவது தடவையாக விதையிட்டு, அதுவும் அழிந்துள்ளது. பருத்தியை காப்பீடு செய்திட கூடுதல் பிரீமியம் என்பதாலும் அதில் விவசாயிகளை இணைத்திட வேளாண் துறை உரிய ஆர்வம் காட்டாததாலும் காப்பீடு செய்திடவில்லை.
பல இடங்களில் ஏற்பட்ட சூறைக்காற்றால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விட்டன. மக்காசோள பயிர்கள் சாய்ந்து முறிந்து விட்டன. கால்நடைகளுக்கு வந்துள்ள கண்டறிய முடியாத மர்மநோயால் தமிழக அளவில் பரவலாக பாதித்து இறந்து வருகின்றன. இதற்கான சிறப்பு மருத்துவமுகாம் அவசரமாக ஏற்பாடு செய்திட வேண்டும்.
எனவே பாதிப்புகளை தமிழக அளவில் ஆய்வு செய்து உரிய உதவிகளை விவசாயிகளுக்கு செய்திட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே உரத் தட்டுப்பாட்டால் பிரச்சனை தொடர்கிறது. உர மானியத்தை குறைத்து விவசாயிகளைப் பற்றி கவலைப்படாது செயல்படும் மத்திய அரசே காரணம் என்றாலும் தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் தட்டுப்பாடில்லாமல் தேவையான உரங்களை தருவித்து வழங்கிட அவசர அவசிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சில்லறை விற்பனைக்கான உரங்களை தனியார் கடைகளுக்கு கொடுத்துவிட்டு, மற்றவைகளை கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கிட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவசாயிகளிடம் கூடுதல் பணம் பறிக்கும் கம்பெனிகள் மற்றும் சில்லரை விற்பனை கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.