சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் சபரீசன் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு தனியார் தொலைக்காட்சியிலும், தமிழ் வார இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னைப் பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கிலிருந்து தனது பெயரை நீக்கக் கோரி சபரீசன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சபரீசன் தொடர்ந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரீசன் தரப்பில், கலைஞர் தொலைகாட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால், இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே வழக்கிலிருந்து தனது பெயரை நீக்க வேண்டுமெனவும், அதுவரை தனி நீதிபதி முன்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதி முன்பாக உள்ள மான நஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.