பெங்களூரு,-மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களின் மீதும், சோலார் பலகைகள் பொருத்தி, மின்சாரம் தயாரித்து பயன்படுத்த பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.மெட்ரோ ரயில்களின் போக்குவரத்து, எக்சலேட்டர், மின்சார பல்புகள், குளிர்ச்சாதனம், மின் விசிறி, லிப்ட், டிக்கெட் வழங்குவது என, ஒவ்வொன்றுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாதந்தோறும், 5.8 கோடி ரூபாய் செலவாகிறது.இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து, மெட்ரோ பாதை விஸ்தரிக்கப்பட்ட பின், இந்த தொகை 19 கோடி ரூபாயாக அதிகரிக்கக்கூடும். மின் கட்டணத்தால், பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது. கோனனகுன்டே கிராஸ், தொட்டகல்ல சந்திரா, வாச்சரஹள்ளி, தலகட்டபுரா, சில்க் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையத்தில், சோலார் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 1.8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதனால் 10.8 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது.இதே போல, இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படும் மெட்ரோ நிலையங்களின் மீது, சோலார் பலகைகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய. பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது.பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த ஆண்டிற்குள் சோலார் மின்சார உற்பத்தி அமைப்புகளால் மாதந்தோறும் 28.5 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். 1.7 கோடி ரூபாய் மிச்சமாகும் வாய்ப்புள்ளது. எதிர் வரும் நாட்களில், ரயில்களின் போக்குவரத்துக்கு, சோலார் மின்சாரம் பயன்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement