மைசூரு-மைசூரின் தேவராஜ் மார்க்கெட் மற்றும் லான்ஸ் டவுன் கட்டடத்தை இடிக்க, பாரம்பரிய ஆலோசனை கமிட்டி அனுமதியளித்துள்ளது. இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.மைசூரின் மத்திய பகுதியில் உள்ள, தேவராஜ் மார்க்கெட், லான்ஸ் டவுன் 100 ஆண்டுக்கும் மேலாக பழமை வாய்ந்தவை. இவ்விரு கட்டடங்களும் சிதிலமடைந்துள்ளன.இரண்டையும் இடித்து விட்டு, பாரம்பரிய வடிவம், பாணி மாறாமல் புதிய கட்ட, மாவட்ட பாரம்பரிய ஆலோசனை கமிட்டி முடிவு செய்துள்ளது.மாவட்ட கலெக்டரும், கமிட்டி தலைவருமான பகாதி கவுதம் தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையில் பாரம்பரிய கட்டடங்களை இடிக்கக்கூடாது என, அரச குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.பிரமோதா தேவி, ‘பாரம்பரியமானது என்பதால், ஜெகன்மோகன் அரண்மனை, ராஜேந்திர விலாஸ் அரண்மனையை இடிக்காமல் பழுது பார்த்தோம். பாரம்பரிய கட்டடங்கள் விஷயத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’இதில் அரசு தலையிட வேண்டும். தேவராஜ் மார்க்கெட், லான்ஸ்டவுன் கட்டடங்களை புதுப்பிக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படையுங்கள். இவற்றை சேதமாக்காமல், நவீனப்படுத்த தயாராக இருக்கிறோம்’ என கூறிஉள்ளார்.கலெக்டர் பகாதி கவுதம் கூறியதாவது:தேவராஜ் மார்க்கெட், லான்ஸ் டவுன் கட்டடங்கள் நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. கட்டடங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இத்தகைய இடத்தில் வியாபாரம், வர்த்தகம் செய்ய முடியாது என வல்லுனர்கள் தெரிவித்தனர்.எனவே இவற்றை இடிக்க முடிவு செய்துள்ளோம். இதே இடத்தில் பழையபடி, பாரம்பரியம், வடிவத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். சிலர் கட்டடத்தை இடிக்காமல் பழுது பார்க்கும்படி, ஆலோசனை கூறினர்.ஆனால் வல்லுனர்கள் எச்சரித்துள்ளதால், இடிக்க திட்டமிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement