நான் யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு தமிழன் நான்; கருப்பு திராவிடனும் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘மோடியும் அம்பேத்கரும்’ என்கிற புத்தகத்தில் முன்னுரை எழுதியிருந்த இளையராஜா, ‘பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார். மோடியை அம்பேத்கருடன் ஓப்பீடு செய்த இந்தக் கருத்துக்கு சில தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக நெட்டிசன்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தக் கருத்தை திரும்பப் பெற முடியாது என்று இளையராஜாவும் உறுதிபட தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ‘கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இளையராஜா தமிழக மக்களின் முழு அன்பை பெற்றவர். இந்த விவகாரத்தை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம். இளையராஜாவுக்கு உறுதியாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத கூட நான் தயாராக இருக்கிறேன். ராஜ்ய சபா எம்.பிக்குள் அவரை அடக்கிவிட வேண்டாம். அவர் ஒரு கடலைப்போல. அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு தமிழன் நான். அவரை விட கருப்பு திராவிடன் நான். நானும் கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் தான். எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது. யுவன்சங்கர் ராஜா கடற்கரையில் நின்ற படி ஏதோ புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தை இத்தோடு விடுங்கள்.