ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மேல்சபை முன்னாள் துணைத் தலைவருமான பி.ஜே.குரியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியை விட்டு ராகுல்காந்தி ஓடினார். ஆனால் இன்னமும் அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது நல்லதல்ல.

காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வலுவான தலைவர் தேவை. அந்த தலைவர் காந்தி குடும்பத்தில் இருந்துதான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. ராகுலை பொறுத்தவரை அவருக்கு கட்சியை நடத்த தெரியவில்லை. தகுதியும் இல்லை. ராகுல்காந்தி நிரந்தர தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அவர் தலைவராக போவதில்லை. மற்ற ஒருவரையும் தலைவர் பதவி ஏற்க விடப்போவதில்லை.

இத்தகைய நிலையில்தான் காங்கிரஸ் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்கள வீரராக நின்று அவர் தைரியத்துடன் வழிநடத்த வேண்டும். ஆனால் அவர் பயந்து பொறுப்புகளை துறந்து ஓடி விட்டார். அவரை எப்படி நம்புவது?

முடிவு எடுக்கும்போதுஅவர் மூத்த தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கும் அனுபவம் இல்லாதவர்களை கருத்துக்களை கேட்டு அவர் முடிவு எடுக்கிறார். அவை அனைத்தும் தவறாக முடிகிறது. அதனால்தான் காங்கிரஸ் கப்பல் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் உற்சாகமூட்டும் தன்மை கிடையாது. சரியான ஆலோசனைகள் நடத்தப்பட்டால்தான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு வளர்க்க முடியும். புதிய தலைவரை வலுவான நபராக தேர்வு செய்தால்தான் காங்கிரசை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.