இந்தியாவின் 29-வது ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தளபதியாக உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடையும் நிலையில், இவருக்கு அடுத்து ஜெனரல் மனோஜ் பாண்டே வரும் ஏப்ரல் 30-ம் தேதி ராணுவத் தளபதியாகப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர் ராணுவத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 29-வது இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பொறியாளராக பணியாற்றியவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982-ம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பல்லன்வாலா எல்லையில் ஆப்ரேஷன் பராக்கிரம் நடத்தப்பட்டபோது பொறியாளர் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர். லெப்டினன் ஜெனரல் பாண்டே தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில் பொறியாளர் படைப்பிரிவு கட்டுப்பாட்டிலுள்ள காலாட்படை பிரிவுக்கும், லடாக் செக்டாரின் மலைப் பிரிவுக்கும் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் அந்தமான் நிக்கோபார் படைப்பிரிவின் தளபதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.