சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும், நடுக்கடலில் நமது எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற்தொழிற் சட்டத்தின் கீழ் நமது மீனவர்களைக் கைது செய்து, அந்நாட்டு சட்டப்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும், பல லட்சக்கணக்கான ரூபாய் தண்டம் விதிப்பதும், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை பறிமுதல் செய்வதும் நாள்தோறும் ஏடுகளில் செய்தி ஆகிவிட்டன.
இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டும் காணாமல் மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்க்கிறது.
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்து, காணிகளை கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து, ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியாகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளை இன்னமும் சிங்கள இனவாத அரசு கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.
பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத்தமிழர்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க வழியில்லாமல், ஆபத்தான படகுப் பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அரசு ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, கைப்பற்றிய படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ம.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணி அளவில், ராமேசுவரத்தில், தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.