உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
விவசாயிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்
ஆஷிஷ் மிஸ்ரா
, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் மீது, மத்திய இணை அமைச்சர் மகனின் கார் ஏறி கொல்லப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர் உள்பட வழக்குக் தொடர்புடையவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் இது விபத்து அல்ல, நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் கீழ் நடந்த கொலை என தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச மாநில கீழமை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில்
உச்ச நீதிமன்றம்
இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.