ரஷியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 54-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் சில இடங்களில் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு குழந்தை உட்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லிவிவ் நகர் மீது திடீரென 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இதில் கரும் புகை வானை சூழ்ந்தது. இதில் 3 ஏவுகணைகள் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் மீதும், ஒரு ஏவுகணை டயர் கடை மீது விழுந்து வெடித்தது. அவசரகால மீட்பு படையினர் இந்த தாக்குதலால் எழுந்துள்ள தீயை அணைத்து வருகின்றனர்.
மேலும் உக்ரைன் ரெயில் சேவை நிறுவனத்தின் தலைவர் ஓலெக்சாந்தர் கமிஷின் கூறுகையில், ரஷியாவின் தாக்குதல்கள் ரெயில்வே கட்டமைப்பு வசதிகளுக்கு அருகே நடத்தப்பட்டன. இதனால் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் தொடரப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படும என கூறியுள்ளார்.