வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி கால்டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்டிரைக்: டெல்லியில் பொதுமக்கள் பாதிப்பு

புதுடெல்லி: வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி டெல்லி கால்டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் இன்று இரண்டு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தலைநகர் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டாக்சி கட்டணத்தை உயர்த்தக் கோரி ‘ஓலா’ மற்றும் ‘உபேர்’ நிறுவனங்களின் கால்டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதேபோல் டெல்லி ஆட்டோ ரிக்‌ஷா சங்கமும் இன்று முதல் போராட்டம் நடத்துகிறது. இதற்கிடையே, ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க டெல்லி அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து சர்வோதயா ஓட்டுநர்கள் சங்க தலைவர் கமல்ஜித் கில் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், வாடகை கட்டணத்தை உயர்த்தவும் அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், திங்கள்கிழமை (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். சிஎன்ஜி-க்கு மானியம் வழங்க வேண்டும். டெல்லியில் 90,000 ஆட்டோக்கள் மற்றும் 80,000 டாக்ஸிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன’ என்றார். மேலும், டெல்லி ஆட்டோ ரிக்‌ஷா சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திர சோனி கூறுகையில், ‘ஒன்றிய மற்றும் டெல்லி அரசுகள் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. மானிய விலையில் சிஎன்ஜி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மார்ச் 30ம் தேதி கடிதம் எழுதியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார். ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் கால்டாக்சி வேலைநிறுத்த போராட்டத்தால் நகர்பகுதியில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.