புதுடெல்லி: “நமது நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் வெறும் வயிற்றுடன் அலைகின்றனர்” என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பியான வருண் காந்தி, சமீப காலமாக தனது சொந்த கட்சியை அடிக்கடி விமர்சித்து வருகிறார். இதனிடையே, தனது தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதிக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்திருந்தவர் இப்போது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளார்.
வருண் காந்தி தனது பேச்சில், “இந்தியாவில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், நமது இளைஞர்கள் வேலையில்லாமல் பசியோடு வெறும் வயிற்றில் அலைகின்றனர். இப்படி கோடிக்கணக்கில் வேலையில்லாமல் இருக்கும் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது, அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சமத்துவம் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கியே நமது போராட்டம் உள்ளது.
இந்திய அரசியலமைப்புக்கு அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இது எப்போது சாத்தியமாகபோகிறது. இந்த அரசு வாக்குறுதி அளித்தபடி, யாருக்கும் வங்கிக் கணக்கில் பணமும் போடவில்லை. இரண்டு கோடி வேலைவாய்ப்புகளையும் வழங்கவில்லை. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கும் என்பதும் நடக்கவில்லை.
அரசியல் என்பது நாட்டை கட்டமைக்கும் கருவி. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமே நமது நாட்டின் உண்மையான போராட்டம். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் போட்டியை விட்டுவிட்டு நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் எதிர்காலம் எனபது வெறும் பேச்சுக்கள் மூலமோ, தேர்தலில் வெற்றி தோல்வி மூலமோ உருவாக்கிவிட முடியாது. நாட்டிற்கு செய்யும் உண்மையான சேவை மூலமே உருவாக்க முடியும்.
இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதே இப்போது என் கவலை. நமது கனவுகள் பெரியவை. ஆனால், அதற்கேற்ப வளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இங்கே அனைத்தையும் தனியார் மயமாக்கும்போது வேலை வாய்ப்புகளும் குறைக்கபடும். இதனால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும்” என்று சொந்தக் கட்சியின் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார்.