டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தை 2014 அக்டோபர் 2 நாள் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை ஒழித்துக்கட்டுவதாகும். நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி கண்ட கனவான தூய்மையான இந்தியா மக்களின் முழு ஈடுபாட்டுடனான பங்கேற்பினால் சிறந்த நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் பட்டியலிட்டிருக்கிறார். அதில் 11 கோடியே 50 லட்சம் வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். 58 ஆயிரம் கிராமங்களும், 3300 கிராமங்களும் திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு எத்தகைய ஊக்கத்தை தரும் என்பதற்கு தூய்மை இந்தியா திட்டம் சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கழிவறை கட்டுவதாக இருக்கட்டும், கழிவுகளை அகற்றுவதாக இருக்கட்டும், பாரம்பரியத்தை பாதுகாப்பதாக இருக்கட்டும் அல்லது தூய்மைக்காக போட்டியிடுவதாக இருக்கட்டும், அனைத்து வகையிலும் தனது தூய்மையை பராமரிப்பதில் இந்தியா நாளுக்கு நாள் புதிய அத்தியாயங்களை எழுதி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.