தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் எதிர்பாராத விதமாக நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இன்று (திங்கள் கிழமை) மேகாலயாவில் தொடங்க உள்ள 83வது தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தனது மூன்று சக அணி வீரர்களுடன் காரில் பயணித்துள்ளார்.
அப்போது குவாஹாத்தியில் இருந்து மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நோக்கி (Guwahati to Shillong) அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த 12 சக்கரம் கொண்ட பெரிய லாரி ஒன்று தடம் மாறி இவர்களின் காரில் மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் இறந்த நிலையில் விஸ்வா தீனதயாளன் மற்றும் அவருடன் பயணித்த மற்ற இருவரும் வடகிழக்கு இந்திரா காந்தி மருத்துவமனையில் (NEIGRIHMS) சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். அங்கு விஸ்வா தீனதயாளன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். அவருடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
With big dreams at such a young age, Deenadayalan had his whole life ahead of him. I extend my deepest condolences to his family. Have asked the team to extend all assistance to complete the necessary formalities. May his soul rest in peace.
— Conrad Sangma (@SangmaConrad) April 17, 2022
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தவர் விஸ்வா தீனதயாளன். சென்னையின் அண்ணா நகரில் உள்ள கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் கிளப்பில் (KTTC) பயிற்சி பெற்றவர். பல தேசிய தரவரிசைப் பட்டங்கள் மற்றும் சர்வதேசப் பதக்கங்கள் பெற்ற இவர், வரும் ஏப்ரல் 27-ல் ஆஸ்திரியாவின் (Austria) லின்ஸில் நடைபெறும் WTT இளைஞர் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ள தேர்வுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
விஷ்வ தீனதயாளன் மறைவிற்கு வருத்தம் தெரிவித்த மேகாலயா அரசின் முதல்வர் கான்ராட் சங்மா (Conrad Sangma), “சிறிய வயதில் பெரிய கனவுகளுடன் பயணித்தவர்” என்று கூறினார். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.