இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் சி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவத்தின் துணைத் தளபதியான இவர், ஏப்ரல் 30-ம் தேதி மதியம் முதல் தலைமைத் தளபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத் தலைமை தளபதியாக இருக்கும் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய ராணுவத் தலைமை தளபதி குறித்த அறிவிப்பை பாதுகாப்புத் துறை இன்று வெளியிட்டுள்ளது.
மனோஜ் சி பாண்டே 1982 டிசம்பர் 24 ஆம் தேதி ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் இணைந்தார். தனது 39 வருட பணி அனுபவத்தில், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மேலும், அந்தமான் நிகோபார் தீவுகள் ராணுவக் கமாண்டர் ஆகவும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு பிராந்திய ராணுவத் தலைமையகத்தின் தலைமைக் கமாண்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார். லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு கல்லூரி, கேம்பெர்லி (இங்கிலாந்து) ராணுவக் கல்லூரி, மெள ராணுவப் போர் கல்லூரி மற்றும் புதுடில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயின்றுள்ளார். தனது வீர தீர செயல்களால், பரம் விஷிஷ்த் சேவா பதக்கம், அதி விஷிஷ்த் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்த் சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
மனோஜ் பாண்டே யார்? – இந்திய ராணுவத்தின் 29-வது தலைமைத் தளபதியான லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் சி பாண்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். ராணுவத்தில் பொறியாளர் பிரிவைச் சேர்ந்தவர். பொறியாளர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன் பெரும்பாலும் காலாட்படை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களே தளபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், 1982-ம் ஆண்டு ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார். டிசம்பர் 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது இந்திய – பாகிஸ்தான் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது மேற்கு எல்லையில் பெரிய அளவிலான துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை அணி திரட்டுவதற்காக ‘ஆபரேஷன் பராக்ரம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ‘ஆபரேஷன் பராக்ரம்’ திட்டத்தில் ஜம்மு – காஷ்மீரில் எல்லையில் உள்ள பல்லன்வாலா செக்டரில் ராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார் ஜெனரல் மனோஜ் பாண்டே.
கிட்டத்தட்ட 39 ஆண்டு காலமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் மனோஜ் பாண்டே பொறியாளர் படைப்பிரிவுக்கும் மட்டுமல்ல, சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் காலாட்படைப் படைப்பிரிவையும், லடாக் எல்லை படைப்பிரிவையும், அந்தமான் நிகோபார் தீவின் கமாண்டராகவும் தலைமை தாங்கிய அனுபவம் கொண்டவர்.
ராணுவத்தின் துணைத் தளபதி ஆகும் வரை கிழக்கு ராணுவத் தளபதியாக வழிநடத்தினார். இந்தியாவின் பூகோள அமைப்பில் அனைத்து திசைகளிலும் பணியாற்றி பாண்டே, முப்படை தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஊட்டி விபத்தில் இறந்த பிறகு துணைத் தளபதி பொறுப்புக்கு வந்தார். முப்படைகளின் அடுத்த தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அதற்கேற்ப, அவரின் அதிகாரபூர்வ ஓய்வும் வரவுள்ளது. இந்த நிலையில் தான் மனோஜ் பாண்டே நியமனம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.