கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவம் தெற்கு உக்ரைனில் உள்ள மிகப் பெரிய எஃகு ஆலையை அழித்தது. மரியுபோலில் உக்ரைன் துருப்புக்களை சரணடையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்ட நிலையில் உக்ரைன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடைசி மூச்சு வரைபோராடுவோம்: உக்ரைன் பிரதமர்
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், தனது படைகள் மரியுபோலில் நின்று தங்கள் கடைசி மூச்சு வரை ரஷ்யாவை எதிர்கொள்வார்கள் என்று கூறுகிறார். அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம், மரியுபோலில் நிலைகொண்டுள்ள உக்ரைன் படைகளிடம், ஆயுதங்களை கீழே போட்டால், உயிர் தப்பிக்கலாம் என்று கூறியது. உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கொனாஷென்கோவ் கூறுகையில், எதிர்ப்பு காட்டுபவர்கள் கொல்லப்படுவது உறுதி என எச்சரித்தார். இதற்கு பதிலளித்த உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், இந்தப் போரில் வெற்றி பெற இறுதிவரை போராடுவோம். இராஜதந்திரத்தின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் சரணடைய விரும்பவில்லை. மறுபுறம், உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மல்யார், மரியுபோல் உக்ரைனைப் பாதுகாக்கும் கேடயம் என்று கூறினார். மரியுபோல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது உக்ரைன் ராணுவம் அங்கு தொடர்ந்து போராடி வருவதாக் அவர் கூறினார்.
மாரியுபோலை விரைவில் கைப்பற்ற ரஷ்யா விரும்புகிறது. ஏனெனில் இதன் மூலம் கிரிமியாவிற்கான ஒரு நில நடைபாதை ரஷ்யாவிற்கு கிடைக்கும். மரியுபோலில் உக்ரேனியப் படைகளைத் தோற்கடித்த பிறகு, அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் டான்பாஸ் நோக்கி நகர முடியும். ரஷ்யா 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை இணைத்தது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது., ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்