இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ ஓடிடியில் நாளை வெளியாகிறது.
நடிகர் கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடிப்பில் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கிய ‘குதிரைவால்’ கடந்த மார்ச் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ’தூக்கத்திலிருந்து விழிக்கும் ஒருவன், திடீரென்று தனக்கு குதிரையின் வால் முளைத்திருப்பதாக உணர்ந்தால் எப்படி இருக்கும்?’ அதுதான் ’குதிரைவால்?’படத்தின் ஒன்லைன்.
ஆனால், அதனை புரியும்படி கொடுக்கவில்லை என்ற விமர்சனங்களையும் ரசிகர்கர்களும் சினிமா விமர்சகர்களும் முன்வைத்தார்கள். அதேசமயம், ஒரு கலைப்படைப்பாகவும் ‘குதிரைவால்’ பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குதிரைவால்’ வெளியாகிறது. இதனை, தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.