புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்கும் ரஷ்யா, இதனைத் தொடர்ந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கோரியுள்ளது. இந்த வர்த்தகமும் ரூபாய் – ரூபிளில் நடைபெறுவதுடன் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.
இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வராத சூழலில் ஆசியநாடுகளுக்கு அதிக அளவில், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா நடவடிக்கை எடுது்து வருகிறது.
சர்வதேச சந்தை மதிப்பை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் விலை குறைவாக இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை செய்கிறது. இந்தியாவிடமிருந்து ரூபாய் மற்றும் ரூபிள் அடிப்படையில் கரன்சியைப் பெற்று கச்சா எண்ணெய் விநியோகம் செய்யவும் ரஷ்யா முன்வந்துள்ளது.
இதுமட்டுமின்றி அமெரிக்க தடையால் ரஷ்யாவில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் உணவு பொருட்களுக்கும், இந்தியாவை அணுகியுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
உணவுப்பொருட்களை தொடர்ந்து மருந்துகளும் சப்ளை செய்யுமாறு ரஷ்யா தற்போது கோரியுள்ளது. இந்திய மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மருத்துவ சாதனங்கள், மருந்துகள் ஏற்றுமதி தொடர்பாக விவாதம் நடைபெறுகிறது. இருதரப்பு உறவுகளை ஊக்குவிக்கும் வணிகக் குழுவான பிசினஸ் ரஷ்யா இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய மருத்துவ சாதனத் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மற்றும் ரூபிள் முறையில் பரிமாற்றம் செய்யவும் தயாராக இருப்பதாக ரஷ்யா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ரஷ்ய சந்தையில் இந்தியா தற்போது குறைவான அளவே ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. ஆனால் இந்த புதிய வாய்ப்பு காரணமாக இந்த ஆண்டு ஏற்றுமதியை 10 மடங்கு அதிகரித்து 2 பில்லியன் ரூபாய் அளவுக்கு உயர்த்த வாய்ப்பு இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.