கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னம்பந்தல் என்ற இடத்தில் திரண்டிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், இடதுசாரிகள், திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி காட்டினர். தமிழ்ப் பாரம்பரியம் கொண்ட தருமபுரம் ஆதீனத்திற்கு, ஒரே மொழி கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் ஆளுநர் செல்லக் கூடாது என போராட்டக்காரர்கள் கூறினர். மேலும் நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை கண்டித்தும் கருப்புக்கொடி காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில் அவர்கள் கருப்புக்கொடிகளை சாலையில் வீசி எறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் தருமபுரத்திற்குச் சென்ற ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெலங்கானா மாநிலத்திற்கு மேற்கொள்ளும் ஞானரதயாத்திரை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இதனிடையே மயிலாடுதுறை சம்பவத்தை குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி மீதான தாக்குதல் சம்பவத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் வினவியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் காரின் மீது கல்லை எரிந்து, கருப்புக் கொடி வீசப்பட்டதற்கு பொறுப்பேற்று, அவரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆளுநரின் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கிடையாது எனக்கூறியுள்ள அண்ணாமலை, உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கவர்னரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தமிழக காவல்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கவர்னர் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2 காவல்துறை துணை தலைவர்கள், 6 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர் கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், கவர்னரின் கார் மற்றும் அவரது கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்ததாக தெரிவித்துள்ளனர். உடனே பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றியதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM