ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மயிலாடுதுறைக்கு வருகை தந்தபோது அவருக்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கால தாமதம் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையில் அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் பகுதியில் விசிகவினர், இடதுசாரிகள், திமுகவினர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் கார் வந்தபோது அவருக்கு எதிராக விசிக, மற்றும் திமுகவினர் சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களை போலிசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறையில் உள்ள சவைட் மடாலயமான தருமபுரம் ஆதினம் மடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். இன்று தருமபுரம் ஆதீனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பஞ்கேற்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவினர், விசிக, இடதுசாரிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கறுப்புக்கொடி காட்டியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: “தன் கட்சியினுடைய சித்தாந்தம் தன் கண்களை மறைத்து அதன் மூலமாக முதலமைச்சர் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்ற நிலைமை வரும் பொழுது, அந்த பதவியில் இருந்து விலகுவது உத்தமம்! இன்று நம் மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு! ஆளுனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“