தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் பத்ராசலம் சென்றபோது, நெறிமுறை மீறல் விவகாரத்தை முறையாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசிடம் திங்கள்கிழமை அறிக்கையை சமர்ப்பித்தார். டெல்லியில் ஊடகங்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தான் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில், மத்திய அரசு எது பொருத்தமான நடவடிக்கையோ அதைச் செய்யும் என்று கூறினார். இருப்பினும், அவர் அறிக்கையின் உள்ளடக்கத்தை வெளியிட மறுத்துவிட்டார். மேலும், தமிழிசை சௌந்தரராஜன் தனிப்பட்ட முறையில் டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆளுநர் விரும்பினால் தெலங்கானா அரசை டிஸ்மிஸ் செய்யலாம் என்பது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் தான் விரும்பினால் தெலுங்கானா அரசை டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறவில்லை என்று மறுத்தார்.
இருப்பினும், அதிகாரிகளால் பல நெறிமுறை மீறல்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பாக ஸ்ரீராம நவமிக்கு அடுத்த நாள் அனுசரிக்கப்படும் சடங்கான, ராமரின் பட்டாபிஷேகம் விழாவைக் காண தான் பத்ராசலம் சென்றிருந்தபோது நெறிமுறை மீறல் நடந்ததாக அவர் கூறினார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தான் ரயிலில் பத்ராசலம் சென்றபோது, தன்னை வரவேற்க சில அதிகாரிகள் மட்டுமே வந்திருந்ததாகக் கூறினார். முதல் நாளில் ஒரு அமைச்சர் வந்திருந்ததால் அதிகாரிகள் வந்ததாகத் தெரிகிறது. ஆனால், இரண்டாவது நாளில் அதிகாரிகள் அவரை முற்றிலும் புறக்கணித்தனர் என்று ஆளுநர் கூறினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை புறக்கணிப்பதாக திமுக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதிராக திமுக முடிவெடுத்ததைக் குறிப்பிட்ட ஆளுநர், இது திமுகவின் கொள்கை முடிவு என்றும் தெலங்கானாவில் நிலைமை வேறு என்றும் கூறினார். தெலங்கானாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதாகவும், அதில் நெறிமுறை மீறல்கள் பற்றிய அறிக்கைகளும் உள்ளதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அம்மா இறந்தபோது தவிர, எப்போதும் தான் உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலகியதில்லை என்று கூறினார். ஏஜென்சி பகுதிகள் தொடர்பான பிரச்சனைகளில் முடிவெடுக்க ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. அதனால்தான், அவர் பழங்குடியினருடன் பழகி, அவர்களுக்கு சில சேவைகளைச் செய்தார். இருப்பினும், அவர் குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மற்றொரு கேள்விக்கு, பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், நெல் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்து டி.பி.சி.சி தன்னிடம் சமர்ப்பித்த அறிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
மேலும், சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்ட படங்கள் மூலம் தன்னை சிலர் கேலி செய்து ட்ரோல் செய்தாலும், தான் வருத்தப்பட்டதில்லை என்று ஆளுநர் தமிழ்சை சௌந்தரராஜன் கூறினார். இருப்பினும், அரசியலமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பதவிகளை மக்கள் மதிக்க வேண்டியது அவசியம் என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”