தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மடத்துக்கு ஆளுநர் ரவி வருகை புரிந்தார். மேலும் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது உள்ளிட்ட சில விவகாரங்களை முன்வைத்து ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், இடதுசாரி கட்சியினரும் அவரது வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு
இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தன் கட்சியினுடைய சித்தாந்தம் தன் கண்களை மறைத்து அதன் மூலமாக முதலமைச்சர் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்ற நிலைமை வரும் பொழுது, அந்த பதவியில் இருந்து விலகுவது உத்தமம்!
இன்று நம் மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு! என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று சிதம்பரம் சென்ற ஆளுனர் ரவி, மனைவியுடன் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“