மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் சதம் அடித்தார்
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் 85 ரன்களும் ,ஆரோன் பின்ச் 58 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டி தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ;
“நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ரன்-ரேட்டிற்கு ஏற்ப சென்றோம். ஆரோன் பின்ச் -க்கு நன்றி .அவர் ஆட்டமிழந்த பிறகு எங்களால் அதனை தொடர முடியவில்லை, .ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. போட்டியில் கடைசி வரை நின்று பேட் செய்வதே எனது திட்டமாக இருந்தது.
நாங்கள் அவரை (ஜோஸ் பட்லர் ) முன்கூட்டியே வெளியேற்றியிருந்தால், ஸ்கோர், மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும். மைதானம் எங்களுக்கு நன்றாக இல்லை. நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.