கான்பூர்,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யை நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபலமானவர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்து பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக்கொண்டு, மீதி 2 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு இருந்தால், நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்காது. இந்த ஏற்றத்தாழ்வை போக்க, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்தியா விரைவில் ‘இந்து தேசம்’ ஆக மாறும். அரசியல் பயங்கரவாதம் மூலம் இந்து சமுதாயத்தை பிளக்க நினைப்பவர்கள், மண்ணை கவ்வுவார்கள் என்று அவர் பேசினார்.
‘‘2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அர்ப்பணிக்க சொல்கிறீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஆமாம். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்களை விசுவ இந்து பரிஷத் தொண்டர்களாக்க வேண்டும்’’ என்று சாத்வி ரிதம்பரா பதில் அளித்தார்.