நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையில் அனைத்து ஒத்துழைப்பும், உதவியும் அளிக்க இந்தியா முயற்சி செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையின் நிதியமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம்- உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரியை சந்தித்து பேசினார். தற்போதைய பொருளாதார சூழல், அதை எதிர்கொள்ள இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் அவர்கள் உரையாடினார்கள். அப்போது அண்டை நாடு என்ற வகையிலும், நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையிலும் இயன்ற அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முயற்சிக்கும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததாக நிதித்துறை ட்விட்டரில் அறிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க பணமின்றி, மக்கள் பசியும் பட்டினியுமாக தவித்து வருகின்றனர். கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் “கோட்டா கோ கம” என பெயரிட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும், நாட்டின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும், நெருக்கடிக்குள்ளான துறைகளை மீட்டெடுக்க வேண்டும், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மேலும் கடனுதவி கேட்க உள்ளது. இதற்காக அந்நாட்டு நிதியமைச்சர் அலி சாப்ரி, மைய வங்கி தலைவர் நந்தலால் வீரசிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது.
வாஷிங்டனில் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு ஐஎம்எஃப் அதிகாரிகளுடன் இலங்கை குழு பேசும் எனத் தெரிகிறது. பேச்சுவார்த்தையின்போது ஐஎம்எஃப்பிடம் மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை இலங்கை கோரும் எனத் தெரிகிறது. இது தவிர இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடமும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடமும் இலங்கை கூடுதல் நிதியுதவிக் கோரி பேசி வருகிறது. இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்கனவே 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதும், அவற்றை இப்போதைக்கு திரும்பத் தர முடியாது எனவும் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM