வாஷிங்டன்: கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் அண்மையில் கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.
நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவினால் எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 500 மில்லியன் டாலர் தொகை கடன் வரம்பில் வழங்கி வருகிறது. இதன்படி ஏப்ரல் 15-ம் தேதி, 18-ம் தேதி
தலா 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பியது. அதே அளவிலான பெட்ரோல் ஏப்ரல் 22 ஆம் தேதி அனுப்பப்படுகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் உதவிக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு தக்க நேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியமும் பாராட்டு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி 20 நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.
முதல் நாளில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
‘‘இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்சார வெட்டு பெருமளவிலான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக இலங்கை அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும், பெட்ரோல், டீசல் போன்றவற்றையும் வழங்கும் இந்தியாவின் நடவடிக்கை முன்மாதிரியானது’’ எனக் கூறினார்.