அம்பத்தூர்:
பா.ஜ.க சார்பில் ஏப்ரல் 18-ந் தேதி முதல் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்படுகிறது இதையொட்டி சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள 43 வட்டத்திலும் தூய்மைப் பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இறுதிக்கட்டமாக போரூர் உள்ள காரம் பாக்கத்தில் மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி தூய்மை பாரத இந்தியா ஒருங்கிணைப்பாளர் கராத்தே தியாகராஜன், ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்து அவர்களுக்கு பிரியாணி வழங்கி அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்கள்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு புத்தக வெளியீட்டு விழாவில் முன்னுரையாக இளையராஜா எழுதி இருந்தார். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய கூடிய கட்சிகள் இளையராஜாவைப் பற்றி பதிவுகள் வெளியிட்டனர்.
இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கிடையாது பா.ஜ.க.விற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை.
தி.மு.க. ஐடி விங் இளையராஜா குறித்து தரக்குறைவான விமர்சனங்கள் செய்தனர் சமூகநீதி பற்றி பேசக்கூடிய நீங்களே ஒருவர் சொல்லக்கூடிய கருத்தை தரக்குறைவான விமர்சனங்கள் செய்தால் உங்களின் சமூக நீதி என்பது போலி சமூகநீதி என்பதை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள் முடிவு செய்து விட்டார்கள்
இளையராஜா பா.ஜ. க.வை சார்ந்தவரல்ல தமிழக மக்களின் அன்பை பெற்றவர் இதையாரும் அரசியலாக்க வேண்டாம். ராஜ்யசபா எம்.பி.பதவி கொடுத்து அவரை அடைக்க வேண்டாம் என்பது எனது கருத்து அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவபடுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கரு.நாகராஜன், சுமதி வெங்கடேசன், லோகநாதன், முரளியாதவ், வலசை விஜய் சுப்பிரமணிய ரெட்டியார், எஸ்.தியாகராஜன், சுஜாதா ஜீவன், சுபாஷ் சந்திரபோஸ், பாஸ்கர், சென்னை சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.