பாலிவுட் முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா, நிகழ்ச்சி ஒன்றில் ஃபேஷன் மற்றும் அழகு பற்றி பேசியபோது, பெண்கள் பொருளாதார சுதந்திரம் கொண்டவர்களாக, அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து பேசுகையில், 17 வயதில் அவரின் அம்மா கூறிய அறிவுரையைப் பகிர்ந்தார் பிரியங்கா. “பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும்; உங்கள் தந்தை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் கணவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் சகோதரன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவையெல்லாம் முக்கியமில்லை, உங்களுடைய தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கான காரணம், அவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாததே. நமக்குள் ஒருவருக்கொருவர் எத்தனை வாய்ப்புகளை உருவாக்குகிறோமோ, அந்த அளவுக்கு நமக்கிடையே சகோதரத்துவம் வளரும். வாய்ப்பு இருப்பதை உங்களுக்கு யாரும் சொல்லப்போவதில்லை. உங்களுக்காக நீங்கள்தான் அதைத் தேடிக் கண்டடைய வேண்டும். இல்லத்தரசியாக இருப்பதே உங்களின் முதல் வேலை, வேலையும் தொழிலும் இரண்டாம் பட்சம்தான் என பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. அன்றாட பொருளாதார தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்துகொள்வதே பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முதல் வழி” என்று கூறியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.