பீகார் மாநிலத்தில் மதுபானம் எளிதாகக் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவருமான பசுபதி பராஸ் கூறியது அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் மதுவிலக்கு சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் பசுபதி பராஸ், மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதை யாரும் மறுக்க முடியாது என்றும் கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், ” பீகாரில் மதுபானம் கிடைக்காது என்று யார் சொன்னது, மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு மதுபானங்கள் அதிகமாக கடத்தப்படுகிறது. இதனால்தான் தொடர்ச்சியாக ஏராளமான மதுபானங்கள் கைப்பற்றப்படுகிறது. மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கிடைப்பதே மது அருந்துபவர்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணம். எனினும், கலப்பட மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் மதுபான மாஃபியா மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்
மதுவிலக்கு சட்டம் என்பது பீகார் மாநிலத்தின் நலன் சார்ந்தது என்பதை தான் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதையும் மீறி மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் பசுபதி பராஸ் கூறினார்.
பாஜக ஆதரவுடன் நிதீஷ்குமார் முதல்வராக உள்ள பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைமையிலான அரசின் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பீகாரை சேர்ந்த மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது மாநில அரசியலில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM