சென்னை: “பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அதை ஏற்கிறோமா எதிர்கிறோமா என்பது வேறு. அதற்காக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியது இல்லை. காரணம், இதைவிட புகழ்ந்து பேசியவர்கள்தான் தற்போது இளையராஜாவை திட்டுகின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இளையராஜாவின் தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அதை ஏற்கிறோமா எதிர்கிறோமா என்பது வேறு. அதற்காக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியது இல்லை. காரணம், இதைவிட புகழ்ந்து பேசியவர்கள்தான் தற்போது இளையராஜாவை திட்டுகின்றனர். இதைவிட பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே. இவர் மாதிரி ஒரு தலைவர் இல்லை என்று பேசியவர்கள் எல்லாம் உள்ளனர். இளையராஜா அவர் கருத்தை தெரிவித்துள்ளார். அதை விட்டுவிட வேண்டியதுதான், அதை பேசிக்கொண்டிருக்க வேண்டியது இல்லை.
கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன் என இரண்டு அடையாளம் கிடையாது. ஒன்று தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு. முதலில் அவர்களே குழம்பியுள்ளனர். யார் திராவிடர்? எச்.ராஜா கூறுகிறார்… ‘மோடி கூட திராவிடர், நான் கூட திராவிடர்தான்’ என்று. தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், திராவிடன் என்கிறீர்கள், தமிழன் என்கிறீர்கள். ஏன் இத்தனை குழப்பம். எதற்காக இரண்டு மூன்று முகமூடியை போட்டுக் கொள்கிறீர்கள். கடைசியாக நான் தமிழன் என்று கூறினால், இந்த சாதி என கூறுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா குழம்ப வேண்டாம், நீ பெருமைக்குரிய தமிழன்.
கேஜிஎஃப்பில் நடித்த யஷ், தான் கன்னடன் என்பதில் பெருமை என்று கூறுகிறார். நான் தமிழன் என்பதில் பெருமை என்று சொல்ல வேண்டியதுதானே. கருப்பாக இருப்பதால் திராவிடன் என்றால், தென்னாப்பிரிக்காவில் அனைவரும் கருப்பாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திராவிடரா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக உள்ளது அது திராவிடமா? அது திராவிடரா?
எங்கள் இனத்தின் நிறம் கருப்பு. உழைக்கும் மக்களின் தோல் கருப்பாகத்தான் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்கள் தோல்தான் மிணுமிணுப்பாக வெள்ளையாக இருக்கும். கருப்பு என்றால் திராவிடன் என சொல்லக் கூடாது. தமிழர்கள் நாங்கள் கருப்பாக இருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.