ஒமைக்ரான் வைரசால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று பாதிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ், மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. மேலும் ஒமைக்ரான் வைரசில் இரண்டு துணை வகைகளும் பரவியது.

இந்த நிலையில் கொரோனா வைரசின் மற்ற மாறுபாடுகளை விட ஒமைக்ரான் வைரசால் குழந்தைகளுக்கு மேல் சுவாச பாதை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டோனி புருக் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட 18 ஆயிரத்து 849 குழந்தைகள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஒமைக்ரான் வைரஸ் பரவுவதற்கு முன்பு மேல் சுவாச பாதை தொற்று 4½ வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டது. ஒமைக்ரான் பரவலுக்கு பின் மேல் சுவாச பாதை தொற்று 2 வயது குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

ஒட்டுமொத்தமாக கொரோனா மற்றும் மேல் சுவாச பாதை தொற்று ஆகியவற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 21.1 சதவீதம் பேர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். அவர்களுக்கு குழாய் மூலம் சுவாசிக்கும் கருவி பொருத்துவது போன்ற சிகிச்சைகள் தேவைப்பட்டது.

கடுமையான மேல் சுவாச பாதை அடைப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பிற கடுமையான நோய் பாதிப்புகளும் ஏற்படலாம்.

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மேல் சுவாச பாதை தொற்று விகிதம் அதிகமாக இல்லை என்றாலும், இந்த புதிய ஆய்வு முடிவால் மேல் சுவாசப் பாதை அடைப்புக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக காட்டுகிறது. இது சிகிச்சை முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்ட உதவும்.

ஒமைக்ரான் வைரஸ் நுரையீரல், உயிரணுக்களில் குறைவான திறமையாகவும் சுவாச பாதைகளில் மிகவும் திறமையாகவும் பிரதிபலிப்பதால் மேல் சுவாசப்பாதை தொற்று கடுமையாக இருக்கலாம் என்றனர்.

இதையும் படியுங்கள்… சமூக வாழ்க்கை மற்றும் விளையாட்டை மாணவர்கள் மறந்து விட கூடாது- பிரதமர் மோடி அறிவுரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.