மும்பை : ”மஹாராஷ்டிராவில், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், இரண்டு நாட்களில் வெளியிடப்படும்,” என, மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
‘ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு முன், ‘அனுமன் சாலிஸா’ பாடலை, ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வோம்’ என்றும் அவர் எச்சரித்து உள்ளார். இதற்கு ஆதரவாக, பா.ஜ.,வும் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் நேற்று கூறியதாவது:மஹாராஷ்டிராவில், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., ரஜ்னிஷ் சேத், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே இருவரும் ஆலோசித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உள்ளனர். இரண்டு நாட்களில், அது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்.அமைதி நிலவ வேண்டும் என்பதே அரசின் விருப்பம். மக்களை பிளவுபடுத்தி வன்முறையை துாண்ட முயற்சிக்கும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பக்தி பாடல்களுக்கு தடை
மஹாராஷ்டிராவில், ராஜ் தாக்கரே அறிக்கையால், மசூதிகளுக்கு வெளியே, அனுமன் சாலிஸா பாடல் ஒலிபரப்பப்படலாம் என்றும், அதனால் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நாசிக் மாவட்டத்தில், ஒலிபெருக்கிகளில் அனுமன் சாலிஸா அல்லது இதர பஜனை பாடல்களை ஒலிக்கச் செய்ய, முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், மசூதிகளில் தொழுகை நடப்பதற்கு முன்பும், பின்பும் அவற்றை ஒலிக்கச் செய்யவும், மசூதிக்கு, 100 மீட்டர் சுற்றளவில் ஒலிக்கவும், தடை விதிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே அறிவித்துள்ளார்.