கதையை நம்பாத ‛டாப்' தமிழ் ஹீரோக்கள் – ‛டப்' கொடுக்கும் ‛டப்பிங்' படங்கள்
சென்னை : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிற மொழி படங்கள் டப்பிங் ஆகி அதிக வசூலை குவிக்க தொடங்கி, இங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு ‛டப்' கொடுக்க துவங்கி உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள டாப் ஹீரோக்கள் கதையை பெரிதாக நம்பாததும், படத்தின் தயாரிப்பு செலவை விட அவர்கள் வாங்கும் அதிக சம்பளமும் முக்கிய காரணம் என திரையுலகினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுப்பற்றிய சிறப்பு கட்டுரை தொகுப்பை இங்கு பார்க்கலாம்…
பீஸ்ட் – கேஜிஎப் 2 ஒப்பீடு
“பீஸ்ட், கேஜிஎப் 2” இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளிவந்து ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. 'பீஸ்ட்' படத்தில் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகனாக விஜய் நடித்திருந்தார். 'கேஜிஎப் 2' படத்தில் கன்னடத் திரையுலகத்தின் வளரும் கதாநாயகனான யஷ் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களையும் ஒப்பிடுவது தேவையற்ற ஒன்றுதான், ஆனாலும் கடந்த ஒரு வார காலமாகவே இரண்டு படங்களையும் ஒப்பிட்டே பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய்யின் படத்தை மட்டம் தட்டிப் பேசுவதா ?, ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பதா ?, என்று தமிழ்த் திரையுலகத்தில் உள்ள சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். மறுபக்கம், எந்த மொழிப் படமாக இருந்தால் என்ன 'கேஜிஎப் 2' படம் இந்திய சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய திரைப்படம் ?, அப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பே இன்றைய ரசிகர்கள் எப்படியான படங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான சாட்சி என்று பலரும் குரல் கொடுக்கிறார்கள்.
|
டப்பிங் படங்கள் : அன்றும்… இன்றும்…
தமிழ் சினிமாவில் டப்பிங் படங்கள் அவ்வப்போது வசூல் சாதனை புரிவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முந்தைய காலங்களில் வெளிவந்த சில படங்களைப் பார்க்கலாம். ஒரு காலத்தில் விட்டலாச்சார்யா படங்கள் பி அன்ட் சி சென்டர்களில் நல்ல வசூலைப் பெற்றதுண்டு. அதற்குப் பிறகு குறிப்பிட்ட சில கால இடைவெளியில் சில படங்கள் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வசூலைக் குவித்ததும் உண்டு.
1983ல் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'கைதி', 1985ல் விஜயசாந்தி நடித்து வெளிவந்த 'பூ ஒன்று புயலானது', 1989ல் நாகார்ஜுனா நடித்து வெளிவந்த 'இதயத்தை திருடாதே, உதயம்', டாக்டர் ராஜசேகர் நடித்து வெளிவந்த 'இதுதான்டா போலீஸ்' உள்ளிட்ட சில பல படங்கள் இங்கு நேரடி தமிழ்ப் படங்களுடன் போட்டி போட்டு வசூலைக் குவித்துள்ளன. இடையில் சில காலம் பெரிய அளவில் தெலுங்கு டப்பிங் படங்கள் வெளியாகவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஆனாலும், அவை சில நாட்கள் மட்டுமே ஓடியதால், பெரிய தாக்கத்தை இங்கு ஏற்படுத்தவில்லை.
|
பாகுபலி தந்த மாற்றம்
'பாகுபலி, பாகுபலி 2' படங்கள் வந்த பிறகு மீண்டும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்படும் படங்கள் மீதான கவனம் அதிகரித்தது. அந்த படத்தில் இருந்த பிரம்மாண்டம், திரைக்கதை ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பின் சில டிவி சேனல்கள் வேற்று மொழிகளில் வெளியான படங்களை டிவிக்காக மட்டுமே டப்பிங் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தன. அப்படி ஒளிபரப்பான படங்களில் சில படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. அது மட்டுமல்ல கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கத்தால் ஓடிடி தளங்களில் பல தமிழ் டப்பிங் படங்கள் ரசிகர்கள் பார்ப்பதற்குக் கிடைத்தன.
தியேட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த மற்ற மொழிப் படங்களை டிவி, ஓடிடி என வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து பார்க்க வைத்தனர். தென்னிந்திய அளவில் ஏறக்குறைய ஒரே விதமான கலாச்சாரம், கூட்டுக் குடும்பம், குடும்ப உறவுகள் என இருப்பதால் மொழி எல்லைகளைக் கடந்து மற்ற மொழிப் படங்களையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் பார்க்கும் போது தமிழ் சினிமாவை விடவும் எந்தெந்த மொழிகளில் எப்படி எப்படியெல்லாம் படங்களை எடுக்கிறார்கள் என்ற ஒப்பீட்டு மனநிலை தானாக வர ஆரம்பித்தது.
தெலுங்கு சினிமா ஆதிக்கம்
பொதுவாகவே தமிழை விட தெலுங்கில் ஒவ்வொரு படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள், கதையம்சம் கொண்ட படங்கள், அதிக ஆக்ஷன் கொண்ட படங்கள், பிரம்மாண்ட உருவாக்கம், விதவிதமான ஆடை, அலங்காரம் என நம் ரசிகர்களை எளிதில் ஈர்க்க ஆரம்பித்தன. தமிழில் ஓரளவிற்கே ரசிகர்களைப் பெற்றிருந்த தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் டிவிக்காக மட்டுமே பிரத்தியேகமாக டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அந்தப் படத்தை பலரும் ரசித்தனர். அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்த நடிகரானார் அல்லு அர்ஜுன். அதுதான் அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படம் தமிழில் இந்த அளவிற்கு வசூலைக் குவிக்கக் காரணமாக அமைந்தது.
|
ஆச்சர்யப்படுத்திய கன்னட சினிமா
கன்னடத்திலிருந்து தமிழில் அதிகமான டப்பிங் படங்கள் வந்ததில்லை. கன்னட இயக்குனரான ரவிச்சந்திரன் இயக்கி ஜுஹி சாவ்லாவுடன் இணைந்து நடித்த 'பருவ ராகம்' படம் தமிழ், கன்னடத்தில் உருவாகி 1987ல் வெளிவந்து, இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு மற்றும் பலர் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' படம் 1991ல் வெளிவந்தது. ஒரே சமயத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க நான்கு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது. ஹிந்தியில் ரஜினிகாந்த் நடிக்க 'சாந்தி கிராந்தி' என்ற பெயரில் உருவானது. ஆனால், படம் ஹிந்தியில் வெளியாகவில்லை. தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்தனர். இந்தப் படத்தைத்தான் முதல் பான்–இந்தியா படம் என்று சொல்ல வேண்டும். அப்போதே இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், நான்கு மொழிகளிலும் தோல்வியைத் தழுவியது.
ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் கன்னடத்திலிருந்து ஒரு படம் தமிழுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2018ல் வெளிவந்த 'கேஜிஎப்' படம், அதன் உருவாக்கத்திற்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதன் காரணமாக இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பும் வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கடந்த வாரம் வெளிவந்த இரண்டாம் பாகம் இருந்ததே இந்த அளவு பெரிய வெற்றி கிடைப்பதற்குக் காரணமாக அமைந்தது.
ஏற்க மறுக்கும் தமிழ் சினிமா
சினிமாவுக்கும், கலைக்கும் மொழி எந்த ஒரு தடையும் இருக்காது என்பார்கள். ஒரு கன்னடப் படம் இங்கு வந்து இந்த அளவிற்கு வெற்றி பெறுவதை இங்குள்ள சில தமிழ்த் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தியேட்டர்காரர்கள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்மைவிட இத்தனை ஆண்டு காலமாக குறைத்து மதிப்பிடப்பட்டிருந்த கன்னடத் திரையுலகத்திலிருந்து புதிய திறமைகள் வெளிவருவதை எந்த மொழி பாகுபாடும் இல்லாமல் பெருந்தன்மையுடன் வரவேற்க வேண்டும்.
|
'கேஜிஎப்' படங்களுக்குக் கிடைத்த வெற்றி அடிக்கடி கிடைக்கும் வெற்றி அல்ல. எப்போதோ ஒரு முறை கிடைக்கும் வெற்றி. 'பாகுபலி 2' படத்தின் வெற்றி போல 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குக் கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் வெற்றி போல 'ராதேஷ்யாம்' படத்தில் பிரபாஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஹீரோக்களுக்கு ஜாஸ்தி
'கேஜிஎப் 2' படத்தை வெறும் 100 கோடி செலவில் இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் என்பதை தமிழ்த் திரையுலகத்தினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு ஒரு படத்தின் செலவில் அதிகப்படியான செலவு படத்தின் ஹீரோ சம்பளத்திற்கே போய்விடுகிறது. இதை எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் மறுக்க மாட்டார்கள். ஹீரோவுக்கே அவ்வளவு தொகையைக் கொட்டிக் கொடுத்துவிட்டால் படத்திற்கான மற்ற செலவுகளை எப்படி சமாளிப்பார்கள். மற்ற மொழிகளில் எந்த ஹீரோவும் இந்த அளவிற்கு சம்பளம் வாங்குவதில்லை. அப்படியே வாங்கும் சிலரும், குறிப்பிட்ட தொகையை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். படம் முடிந்து வியாபாரம் ஆன பின்தான் தங்களது மீதி சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். சில ஹீரோக்கள் படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை தங்களது சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.
|
தயாரிப்பாளர்களுக்கு நிதிச்சுமை
இங்கு 'பீஸ்ட், கேஜிஎப் 2' இரண்டு படங்களையும் பற்றிய ஒப்பீடு அதிகமா இருந்தது. 'பீஸ்ட்' படத்தில் விஜய்யின் சம்பளம் 100 கோடி என்கிறார்கள். அதைவிட இரண்டு மடங்கு செலவு செய்து படத்தை எடுத்திருந்தால்தான் அதற்கான பிரம்மாண்டம் கிடைக்கும். ஆனால், 'கேஜிஎப் 2' படத்தின் மொத்த பட்ஜெட்டே 100 கோடி தான் என்று சொல்கிறார்கள். ஒரு படத்தில் ஹீரோவின் சம்பளம் மட்டுமே அந்தப் படத்தின் பெரும் செலவீனமாகப் போய்விடுகிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் சொந்தப் பணத்தில் படமெடுப்பவில்லை. அனைவருமே வட்டிக்கு வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, தங்கள் படங்களின் பட்ஜெட்டை அதிகமாக்க ஹீரோக்கள் முன் வரவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் கடந்த ஒரு வார காலமாக பேச ஆரம்பித்துள்ளார்கள்.
ஹீரோக்காக கதை
சம்பளம், பட்ஜெட் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு படத்தின் வெற்றிக்கான முக்கிய அம்சம் அதன் கதை. பொதுவாக சினிமாவில் கதை எழுதிவிட்டு பிறகுதான் அதற்குப் பொருத்தமான கதாநாயகன் யார் எனத் தேடுவார்கள். ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் யார் கதாநாயகன் என்று முடிவான பிறகு தான் அவருக்குப் பொருத்தமான கதையைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கையில் இருந்து, இயக்குனர்களின் கைகளுக்கு மாறி, தற்போது கதாநாயகர்களின் கைகளில் விழுந்துள்ளது. அது மீண்டும் இயக்குனர்களின் கைகளுக்கோ, தயாரிப்பாளர்களின் கைகளுக்கோ சென்றால்தான் மற்ற மொழிப் படங்களுக்குப் போட்டியாக இங்கு மீண்டும் படங்களை உருவாக்க முடியும்.
ஹீரோக்களுக்காக உருவாக்கப்படாத, கதையம்சமுள்ள டப்பிங் படங்களுக்கு தமிழகத்தில் கிடைத்து வரும் வரவேற்பு, தமிழில் தாங்கள் தான் பெரிய ஹீரோ என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.