கரூர்: புதிதாக தொடங்கப்பட்ட கரூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2021 2022ம் கல்வியாண்டில் 4 வேளாண்மைக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டு 2021, 2022ம் கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சி பன்நோக்கு மையக்கட்டிடத்தில் தற்காலிகமாக வேளாண்மைக் கல்லூரி செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
கரூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நோடல் அலுவலராக பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பரில் பொறுப்பேற்றுக் கொண்டார். நீட் தேர்வு, கரோனா ஆகியவற்றின் காரணமாக வேளாண்மைக் கல்லூரி 2021-2022ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஏப். 10 ஆம் தேதி முடிவுற்றது.
இதையடுத்து புதிதாக தொடங்கப்பட்ட கரூர், நாகப்பட்டினம், செட்டிநாடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 உள்ளிட்ட 18 அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் நேற்று (ஏப். 18ம் தேதி) மாணவர் சேர்க்கை தொடங்கியது. கரூர் மாநகராட்சி பல்நோக்கு மையக்கட்டிடத்தில் செயல்படும் கரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நேற்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 50 முதல் 60 இடங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய வேளாண்மைக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆட்சியர் பங்கேற்கும் வகையில் விழா நடைபெறும் என்று தெரியவருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிகிறது.