கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அவசர தேவைக்கான பிரிவின் கீழ் நில உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்காமலேயே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இதுநாள் வரை நிலங்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளாமலும், நிலத்துக்கான இழப்பீடு வழங்காமலும் இருப்பதை பார்க்கும் போதே அவரச தேவைக்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாக தெரிவதாக கூறி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.