கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் கடந்த நான்கு நாட்களில் பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், செட்டியார் பூங்கா ஆகியவற்றை கண்டுகழித்ததில் தோட்டக்கலைத் துறையினருக்கு ரூ.7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் குவிந்தனர். இதனால் தோட்டக்கலைத் துறையினருக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், செட்டியார் பூங்கா ஆகியவற்றை காண சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்தது.
பூங்காக்களை காண சுற்றுலா பயணிகளுக்கு சிறுவர், பெரியவர் என இரண்டு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதில் பிரையண்ட் பூங்காவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகையால் மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 35 ரூபாய்
வசூலாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 525 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ரோஸ் கார்டனில் சுற்றுலா பயணிகள் வருகை பிரையண்ட் பூங்காவை விட அதிகம் காணப்பட்டது. இதில் கடந்த நான்கு நாட்களில் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 725 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பிரையண்ட் பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகளை விட ரோஸ் கார்டனை அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான மற்றொரு பூங்காவான செட்டியார் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு 50 ஆயிரத்து 330 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்ததின் மூலமாக மொத்தம் 7 லட்சத்து 1,090 ரூபாய் தோட்டக்கலைத்துறைக்கு வருவாயாக கிடைத்துள்ளது என கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.