கொரோனா பேரிடர்:
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பேரிடரில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் அலை சமயத்தில் தொற்று பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால். கொரோனா இரண்டாம் அலையின்போது, யாருமே எதிர்பார்த்திராத வகையில் பாதிப்புகள் அதிகமாக இருந்தன.
தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனைகளின் வாசல்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. அவ்வளவு ஏன்… கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்குக்கூட நீண்ட வரிசையில் காத்திருக்கும் கொடூரத்தையெல்லாம் நாம் கண்முன்னே கண்டோம். அதிகரித்துக் காணப்பட்ட தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து… நாடு இயல்புநிலைக்குத் திரும்பியது. இந்தியாவில் இதுவரை 5.21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?
கொரோனா பேரிடர் உச்சத்திலிருந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. இது தொடர்பாக, “குஜராத் மாநிலத்தில் 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மட்டும் சுமார் 1,23,873 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேதிகளில் 4,128 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அரசு கூறுகிறது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த நேரத்தில் வெறும் 58,023 இறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன” என்றும்,
“கொரோனாவால் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அரசால் சமாளிக்க முடியாது. இந்தத் தகவல்கள் அனைத்துமே குஜராத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் கூறுகிறோம். சமீபத்தில், கங்கை நதிக்கரைகளில் 2,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதே இதற்குச் சான்று. மத்திய அரசும், மாநில அரசும் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பதாகச் சந்தேகம் எழுகிறது. உண்மையை வெகு நாள்களுக்கு மறைக்க முடியாது” என்று ப.சிதம்பரம் புள்ளிவிவரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
வலுக்கும் குற்றச்சாட்டு:
இந்த நிலையில், “கொரோனா உயிரிழப்பு குறித்த விவரங்களைப் பகிர்வதில் இந்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. உண்மையாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து பொதுவெளியில் வெளியிடுவதை இந்திய அரசு தடுக்கிறது” என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டுவதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் கடந்த 16-ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து, “பிரதமர் மோடி உண்மையைப் பேசுவதில்லை. மற்றவர்களைப் பேசவிடுவதுமில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் பொய் சொல்கிறார். இது குறித்து நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் மோடி ஜி” என்று பதிவிட்டிருக்கிறார்.
அரசின் பதில்:
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா இறப்புகள் குறித்து வல்லரசு நாடுகள் கொடுக்கும் தரவுகளை எந்தவித மாற்றமும் இல்லாது உலக சுகாதார நிறுவனம் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்தியா போன்ற சில நாடுகளிடமிருந்து கொரோனா இறப்பு எண்ணிக்கையை கணிதவியல் அடிப்படையில் தர வேண்டும் என்று கேட்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரே செயலை இரண்டு வகையில் பிரித்துப் பார்க்கிறது.
குறைந்த மக்கள்தொகை கொண்ட சிறிய நாடுகளில் செய்யும் கணக்கீட்டு முறை, இந்தியா போன்ற பெரும் நாடுகளுக்கு எப்படிப் பொருந்தும். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு எந்த விளக்கமும், பதிலும் தரவில்லை. கணிதவியல் கோட்பாடு முறை இந்தியாவுக்குப் பொருந்தாது. கொரோனா மரணங்களை மறைக்க இந்திய அரசுக்கு அவசியம் எதுவும் கிடையாது. ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை” என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாளிதழ்கள் தொடங்கி, இந்திய அரசியல்வாதிகள், மருத்துவ நிபுணர்கள் எனப் பலரும் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்பான தரவுகளைத் தாங்கள் உள்ளதை உள்ளபடியே வழங்கிவருவதாகத் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.