கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் திருவிழா இன்றைய தினம் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் வந்துள்ளனர்.
கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் திருநங்கைகளுக்கான `மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி, நேற்றைய தினம் (18.04.2022) விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்த நிகழ்ச்சி, இம்முறை சிறப்பாக நடத்தப்பட்டது. தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சுற்று நேற்று காலை நடைபெற்றது. அதில் சுமார் 50 திருநங்கைகள் பங்குபெற்ற நிலையில், 15 திருநங்கைகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விழுப்புரம் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில், `மிஸ் கூவாகம்- 2022′ திருநங்கையரை தேர்வு செய்யும் போட்டி நேற்று மாலை நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், அரசு அதிகாரிகள், நடிகை நளினி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டனர். மேலும், ஆயிரக்கணக்கான திருநங்கைகளும் ஒன்று திரண்டிருந்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தேர்வு செய்யப்பட்ட 7 திருநங்கைகளிடம் பொது அறிவுத்திறன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. மிகவும் சிறப்பாக பதில் அளித்த சென்னையைச் சேர்ந்த மெகந்தி, `மிஸ் கூவாகம் – 2022′ பட்டத்தை வென்றார். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த ஸ்வீட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றியாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவர்களுக்கு மற்ற போட்டியாளர்களும், பார்வையாளர்களும் தங்களது ஆரவாரமான பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதேபோல, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கடந்த 17-ம் தேதி அன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற `மிஸ் திருநங்கை’ அழகிப் போட்டியில், சென்னையை சேர்ந்த சாதனா முதலாவது இடத்தையும், இரண்டாவது இடத்தை மதுமிதாவும், மூன்றாவது இடத்தை எல்சாவும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.