தற்போதைய அரசியல் சூழலில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய ஓட்டுநர் தொழுகை செய்ய இந்து பெண் இடமளித்த மனிதநேய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பையில் தொழில் முனைவராக இருக்கும் ப்ரியா சிங், விமான நிலையம் செல்வதற்காக ஊபர் வாகனத்தில் (uber) சென்றுள்ளார். பயணத்தின் பத்து நிமிடங்கள் கழித்து, ஓட்டுநரின் மொபைலில் இருந்து பாங்கு (Azaan) எனப்படும் தொழுகைக்கான அழைப்பு ஒலித்துள்ளது.
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தினமும் கடுமையான நோன்பு மற்றும் தொழுகையைக் கடைப்பிடிப்பர். பாங்கு ஒலித்ததைத் தொடர்ந்து, நோன்பு முடிந்ததும் அவர்கள் உண்ணும் (இஃப்தார்) மாலை உணவை முடித்து விட்டீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் தனக்கு வேலை இருப்பதால், முன்னரே இஃப்தாரை முடித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து அந்தப் பெண், ஓட்டுநரிடம், “நீங்கள் உங்களுடைய தினசரி தொழுகையைச் செய்ய வேண்டுமா?” என கேட்டிருக்கிறார். “உங்களுக்குச் சரியென்றால் வண்டியை ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தொழுகையில் ஈடுபடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் ஓட்டுநர். உடனே அந்தப் பெண், ஓட்டுநருக்கு தன்னுடைய இருக்கையை தொழுகை செய்யக் கொடுத்துவிட்டு, வண்டியின் முன் இருக்கையில் ப்ரியா சிங் காத்திருந்தார்.
அந்தத் தருணத்தை செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார் அந்தப் பெண். இஸ்லாமிய நண்பருக்கு உதவிய இந்துப் பெண்ணின் இந்தச் செயலைப் பாராட்டி சமூக ஊடகங்களில் ப்ரியாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.