திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த நக்கலகுண்டா பகுதியை சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. தம்பதிக்கு மோனிகா (வயது 4) என்ற மகள் உள்ளார். மணி வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது.
நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த மோனிகா திடீரென காணாமல் போனார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மோனிகாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மோனிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மணிகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தபடி வனப்பகுதிக்குள் சென்றது. அங்கு புதருக்கு அருகில் மோனிகா உடைகள் கிழிந்த நிலையில் மயக்கமடைந்து கிடந்தார். போலீசார் மோனிகாவை மீட்டு குப்பத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் 2 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாததால் மோனிகா மயக்கம் அடைந்து இருப்பதாகவும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சிறுமி வழிதவறி காட்டுக்குள் சென்றிருக்கலாம். பின்னர் வீட்டிற்கு வர வழி தெரியாமல் அங்கே தவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.