சிறந்த மருத்துவ சேவைக்கு அரசின் வழிகாட்டுதல்| Dinamalar

சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் வகையில், மருத்துவ பணியாளர்களை நான்கு வகைகளாக பிரிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.சுகாதார பணிகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், நாடு முழுதும் சுகாதார பணிகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.இவற்றை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன் விபரம்:மருத்துவ சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், தரத்தை உயர்த்தும் வகையிலும், குறைந்த செலவில் கிடைக்கும் வகையில், சுகாதார பணிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.சிறப்பு பிரிவினர், பொது சுகாதார பிரிவினர், சுகாதார நிர்வாக பிரிவினர், கல்வி பிரிவினர் என, மாநிலம், மாவட்ட, வட்டார அளவில் பிரிக்கலாம்.இதன் வாயிலாக, ஒவ்வொரு பிரிவிலும் தேவையான பணியாளர்களை அடையாளம் பார்த்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்.

அடுத்த ஆறு மாதங்கள் முதல், ஒரு ஆண்டுக்குள் காலி பணியிடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயித்து கொள்ளலாம்.இவ்வாறு பிரித்து கொள்வதன் வாயிலாக, மருத்துவ சேவையை மேலும் சிறப்பாக அளிக்க முடியும். நிர்வாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதால், டாக்டர்கள் தங்களுடைய பணிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும்.சிறப்பு பிரிவினர் என்பவர்கள், மருத்துவ பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மருத்துவம், அறுவை சிகிச்சை, முடநீக்கியல், மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்டவற்றில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம்.பொது சுகாதார பிரிவினர்கள் எம்.பி.பி.எஸ்., அல்லது தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

புதிதாக எம்.பி.பி.எஸ்., பதிவு செய்துள்ள அனைவரும், குறைந்தபட்சம் 3 – 5 ஆண்டுகள் பொது சுகாதார பிரிவில் அனுபவம் பெற வேண்டும்.சுகாதார நிர்வாக பிரிவில், மருத்துவம் மற்றும் மருத்துவ திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். எம்.பி.ஏ., எனப்படும் முதுநிலை நிர்வாக பட்டப் படிப்பு பெற்றவர்களையும் இதில் பயன்படுத்தலாம்.கல்வி பிரிவில், தேசிய மருத்துவக் கமிஷன் ஏற்கனவே நிர்ணயித்துள்ள வழிமுறைகளின்படி மருத்துவ ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

– நமது சிறப்பு நிருபர் –

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.