சென்னையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் – மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், இந்த சம்பவத்தில் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே, நேற்றிரவு தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருவர் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை சோதனை செய்த போது, இடுப்பில் ஒரு அடி நீலமுள்ள பட்டாக்கத்தி மற்றும் 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும், திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28) என்பதும், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (25) என்பதும் தெரியவந்தது. பெயிண்டர் வேலை செய்து வரக்கூடிய ரமேஷ் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
image

மேலும் குதிரை ஓட்டுபவரான விக்னேஷ் மீது மெரினா, பட்டினம்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடும் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து இன்று காலை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு, இரண்டு பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ,வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
image
விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்த தகவல் அறிந்து துறைரீதியிலான விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன், நேரடியாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு வந்து, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் உயிரிழந்த விக்னேஷிடம் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
சந்தேகமான முறையில் இறந்த விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூராய்வு நாளை நடைபெற உள்ளது. மேலும் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் அடைந்திருப்பதால் வழக்குப்பதிவு செய்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் வேளையில், காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.