சென்னை: விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு “புதிய பன்னாட்டு விமான நிலையத்தை” நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், அதிகரித்து வரும் விமானப் பயணிகள் போக்குவரத்தை கையாளுவதற்காக, புதிய விமான நிலையம் அமைக்கும் பொருட்டு, டிட்கோ நிறுவனம் மற்றும் இந்திய விமானநிலைய ஆணையமும் இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு “புதிய பன்னாட்டு விமான நிலையத்தை” நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.
இப்புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுவதற்கான பணியை அரசு, டிட்கோவிடம் ஒப்படைத்திருக்கிறது. இதன்படி, சாத்தியமுள்ள நான்கு இடங்களை டிட்கோ தேர்வு செய்து, இவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டது. இந்த நான்கு இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளின் குழு பார்வையிட்டு, அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம்: > சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக 64.57 ஏக்கர் பட்டா நிலம் கையகம் செய்யவும் மற்றும் 11.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை நில உரிமை மாற்றம் செய்யவும் சென்னை விமான நிலைய ஆணையம் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
> இதில், 30.57 ஏக்கர் பட்டா நிலம் ஏப்ரல் 2022 முடியும் முன்னதாக சென்னை விமான நிலையத்திடம் ஒப்படைக்கப்படும்.
> நிலமாற்றம் தொடர்பான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.
> மேலும் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 16.89 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு நில மாற்றம் செய்ய இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆணை எதிர்நோக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.