பள்ளிக் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான வகையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணம் செய்யும்போது கீழே விழுந்து அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதைத் தடுக்க தமிழகக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையில் நேற்று (19.04.2022) சென்னை முழுவதும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களையும், 44 கல்லூரி மாணவர்களையும் பேருந்திலிருந்து கீழே இறக்கி, மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையினர், அந்த மாணவர்களுக்குப் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதின் அபாயத்தைக் கூறி அறிவுரை சொல்லி அனுப்பிவைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளி குழந்தைகளை வேகமாக அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், பள்ளிப் பகுதிகளில் ஒருவழிப்பாதையில் பயணித்தவர்கள் மீதும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படியில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் படிகளில் நின்று பயணம் செய்யும் மாணவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டிகள் என அனைவரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.