புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், ‘அதிக அளவு வரியால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ₹1.5 லட்சம் கோடிக்கு புதிய வரிகள் விதிப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஜிஎஸ்டியில் மிக குறைந்த வரி அடுக்கில் உள்ள 5 சதவீதத்தை 8 சதவீதமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் மசாலா பொருட்கள், டீ மற்றும் சர்க்கரை ஆகியவை விலைகள் உயரக்கூடும். ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அரசின் இந்த முடிவால் 5% வரி பிரிவில் இருக்கும் நிலக்கரி, சாண வாயு, உரங்கள், உயிர் காக்கும் மருந்துகள், ஊதுபத்திகள், காது கேட்கும் கருவிகள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறி உள்ளார்.ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 5 சதவீதத்தை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள சில பொருள்கள் 3 சதவீத வரி அடுக்கிலும் ஏனைய பொருள்கள் 8 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.