வாஷிங்டன்:
ரஷியா, உக்ரைனுக்கு எதிரான போர் 55-வது நாளாக நடைபெற்று வருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு விதமான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரும் நகரங்களை ரஷியா முற்றுகையிட்டு தாக்கி வருகிறது. உக்ரைனும் ரஷிய படைகளுக்கு பதிலடி தந்து வருகிறது. உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கோரி வருகிறார்.
ஐரோப்பிய நாட்டுத்தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு நேரில் சென்று ஜெலன்ஸிகியை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நாட்டிற்கு வந்து போர் சூழலை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஜோ பைடனும் தனது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் ஒருமுறை உக்ரைனுக்கு சென்று கீவ் நகரை பார்வையிட தயாராக இருப்பதாக கூறிவந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் உக்ரைன் சென்று பார்வையிடுவர் எனவும் விளக்கம் அளித்துள்ளது.