காவிரி டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக, கஞ்சா, அபின், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இதனால், இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இவர்களின் வாழ்க்கை சீரழிவதோடு, சமூக விரோத, குற்ற நடவடிக்கைகளும் பெருகி வருவதாக ஆதங்கப்படுகிறார்கள்.
போதைப்பொருள்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த, காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பரவலான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க ரகசிய காண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் தான் திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கையும் களவுமாக பிடிப்படுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது கொராடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் கடைத்தெருவில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞரின் நடவடிக்கைகள், காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவரின் பேச்சு, முன்னுக்குப்பின் முரணாக இருந்திருக்கிறது. காவல்துறையினர் அவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுருக்கிறது. அந்த இளைஞரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த கொரடாச்சேரி காவல்துறையினர், அவரிடம் மேலும் தீவிர விசாரணை செய்திருக்கிறார்கள். கஞ்சாவோடு பிடிப்பட்ட இந்த இளைஞர், ஒடிசா மாநிலம் போலாரோடா தாலுகாவை சேர்ந்த சகார்தாஸ் என்பது தெரியவந்தது.
இவர் திருவாரூர் மாவட்டம் கொராச்சேரி, அம்மையப்பன், நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பல பகுதிகளில் சமீபகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து சகார்தாஸ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 29-ந்தேதி வரை சகார்தாஸை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, சகார்தாஸ் நாகப்பட்டினம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சகார்தாஸோடு வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனவும் ஒரிசா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு போதைப் பொருள்கள் கொண்டு வரப்படுகிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.