புதுடெல்லி: டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசிக் கலவரமாக மாறிய நிலையில் மங்கோல்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் முஸ்லிம்கள் பூமழை பொழிந்தது தொடர்பான வீடியோ பதிவுகள் வைரலாகி வருகின்றன.
கடந்த 16-ல் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டிடெல்லியின் ஜஹாங்கிர்புரி மசூதியின் அருகே மாலை 6.15 மணிக்குராம நவமி ஊர்வலம் வந்தபோதுமுகம்மது அன்ஸர் (35) என்பவர்தலைமையில் ஒரு கும்பல் மறித்தது. அங்கு இருவருக்கு இடையேநடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறி, மசூதியின் மீது காவிக்கொடி நாட்ட முயற்சி, கற்கள் வீசப்பட்டு, முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டன. எதிர்தரப்பிலும் கற்களுடன் பாட்டில்களும் வீசப்பட்டன. ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில் துணைஆய்வாளர் உட்பட 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், ஜஹாங்கிர்புரியிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள உத்தம் நகரில் மறுநாளான ஹனுமன் ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை பஜ்ரங் தளம் அமைப்பினர் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வெளிப்படையாக ஊர்வலத்தினர் கைகளில் இருந்தன. இதன் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி போலீஸாரால் எச்சரிக்கப்பட்டு அவை காணாமல்போயின. தொடர்ந்து இப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி தொடங்கி அமைதி நிலவுகிறது.
இந்நிலையில், இவற்றுக்கு நேர்எதிரான காட்சிகளை டெல்லியின் மங்கோல்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் காண முடிந்தது. இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் நுழைந்த போது அங்குள்ள மாடி வீடுகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலத்தினர் மீது பூமழை பொழிந்தனர். மசூதிகளின் மேல் தளத்திலும் முஸ்லிம்கள் ஊர்வலத்தில் பூக்களை வீசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சாலை ஓரங்களிலும் பல முஸ்லிம்கள் கும்பலாக நின்று ஊர்வலத்தினர் மீது பூக்களை தூவினர்.
இதைக் கண்டு மகிழ்ந்த ஊர்வலத்தினர் முஸ்லிம்களுடன் கைகுலுக்கினர். தாடி, தொப்பி என்றிருந்தவர்களுடன், ஊர்வலத்தினர் காவி கொடிகளுடன் மகிழ்ச்சியாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது நடைபெறும் முஸ்லிம்களின் புனிதமான ரம்ஜான் மாதத்தில் அவர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இதை நிறைவு செய்யும் சூரிய அஸ்தமன நேரமாக இருந்தும் முஸ்லிம்கள் பொருட்படுத்தாமல், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தினரை உற்சாகப்படுத்தினர்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் இரண்டு நாட்களாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. நாட்டின் சில மாநிலங்களில் முஸ்லிம்களின் தொழுகைக்கான பாங்கு முழக்கங்கள் ஒலிப்பெருக்கிகளில் அறிவிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சமயங்களில் டெல்லியின் மங்கோல்புரியில் நிகழ்ந்த மதநல்லிணக்கக் காட்சிகள் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.